வேலை-தொடர்பான பாலியல் தொந்தரவு: உங்களுக்குள்ள உரிமைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வேலை தொடர்பான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளான அல்லது அவற்றைக் கண்ணுற்ற  ஊழியர்களுக்கு உதவும் வள-ஆதாரங்கள்.

Shape

பாலியல் தொந்தரவு என்பது ஒரு தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையாகும். மேலும் தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பைப் பேண வேண்டியது முதலாளிகளின் பொறுப்பாகும்.

வேலை தொடர்பான பாலியல் தொந்தரவு என்பது உங்கள் பணியிடத்தில், நீங்கள் பணியில் உள்ள நேரத்தில்  அல்லது வேலை தொடர்பான நிகழ்வுகளின் போது  நிகழும் பாலியல் தன்மை கொண்ட  விரும்பத்தகாத நடத்தையாகும்.  சில வகையான பாலியல் தொந்தரவுகள் பின்வருமாறு:

  • தொடுதல்
  • உறுத்துப் பார்த்தல் அல்லது காமப் பார்வை
  • உள்ளர்த்தம் உள்ள கருத்துரைகள் அல்லது நகைச்சுவைகள்
  • ஆபாசப் படங்கள் அல்லது சுவரொட்டிகள்
  • சந்திப்புகளுக்காக வெளியேசெல்ல மீண்டும்-மீண்டும் செய்யப்படும் அழைப்புகள்
  • பாலுறவுக்கான வேண்டுகோள்
  • ஒருவரின்  தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உடலைப் பற்றிய அத்துமீறிய கேள்விகள்
  • அவசியமற்ற தொடுகை, உதாரணமாக வேண்டுமென்றே ஒருவர் மீது உராய்தல்
  • பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான அவமதிப்பு அல்லது கிண்டல்
  • பாலுணர்வை வெளிப்படுத்தும் உடல் ரீதியான தொடுகை
  • ஆபாசமான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது சமூக ஊடக செயல்பாடு

உங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு தொழிலாளர் என்ற முறையில், நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது. பாலியல் தொந்தரவுகள் இல்லாத பாதுகாப்பானதொரு பணியிடத்தை வழங்குவதும் பராமரிப்பதும் உங்களுடைய முதலாளியின்  பொறுப்பாகும். சம வாய்ப்பு மற்றும் பாரபட்சத்திற்கெதிரான  சட்டங்களின் கீழ் பணியிடப் பாலியல் தொந்தரவுகளிலிருந்தும் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.

ஒரு தொழிலாளர் என்ற வகையில், பணியிடத்தில் உங்கள் சொந்த உடல்நலம் மற்றும் பாதுகாப்பைத் தகுந்த முறையில் கவனித்துக்கொள்வதும், நீங்கள் செய்யும் அல்லது செய்யாத காரியங்களினால் பாதிக்கப்படக்கூடிய மற்றவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும்.

மொழிபெயர்ப்பு சேவைகள்

கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆதரவு சேவைகளின் மூலம் உங்களுக்கு வழிகாட்ட உதவும் ஒரு உரைபெயர்ப்பாளருடன் தொடர்புகொள்ள 131 450-ஐ நீங்கள் அழைக்கலாம்.
 

உடனடி ஆதரவுதவி

நீங்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஆதரவுதவியளிக்கப் பல சேவைகள் உள்ளன.

நீங்கள் தற்போது பாதுகாப்பின்றி இருப்பதாக உணர்ந்தால் அல்லது உங்களுக்கு உடனடி உதவி தேவைப்பட்டால் (24/7 எனும் ரீதியில் கிடைக்கும்): 

  1.  ‘விக்டோரியா போலீ’ஸை 000-இல் அழைக்கவும்
  2. 13 11 14-இல் ‘லைஃப்லைன்’ (lifeline) -ஐ  அழைக்கவும்
  3. 1800RESPECT -ஐ (தேசிய பாலியல் வன்முறை அவசர உதவி இணைப்பு’(national sexual assault hotline)) 1800 737 732 என்ற இலக்கத்தில் அழையுங்கள்

நடந்த சம்பவத்தைப் பற்றிப் புகார் செய்யுங்கள்

நீங்கள் பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டிருந்தால், உங்களுக்கு உதவுவதற்கான பலவிதமான விருப்பத் தெரிவுகளும் ஆதரவு சேவைகளும் உள்ளன. பாலியல் தொந்தரவுகளை, சம்பவ புகாரளிப்பு ஒழுங்குமுறை மூலம் உங்கள் மேலாளருக்கு அல்லது மனிதவள அலுவலர்களுக்கு நேரடியாகத் தெரியப்படுத்துவது பாதுகாப்பானது என நீங்கள் நினைத்தால், நீங்கள் அப்படிச் செய்யலாம். உங்கள் சூழ்நிலையில் இது சாத்தியமில்லை அல்லது செய்ய முடியாது என்றிருந்தால், அவ்விடயத்தைத் தெரியப்படுத்துவதற்கான பிற விருப்பத் தெரிவுகள் பின்வருமாறு:

‘வொர்க் ஸேஃப் விக்டோரியா’ (WorkSafe Victoria)

வேலை தொடர்பான பாலியல் தொந்தரவு உட்பட பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களிலும் ‘வொர்க் ஸேஃப் விக்டோரியா’ (WorkSafe Victoria)-வினால் உங்களுக்கு உதவ முடியும். எமது ‘அறிவுரையாலோசனை சேவை 1800 136 089-இல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7:30 - மாலை 6:30 வரை கிடைக்கிறது.

‘விக்டோரிய சம வாய்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்’ (Victorian Equal Opportunity and Human Rights Commission, VEOHRC)

பணியிடத்திலும், கல்வி மற்றும் ‘பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறல்’ போன்ற வாழ்வின் பிற துறைகளிலும் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டவர்களுக்கு இலவச மற்றும் இரகசிய தகவல் மற்றும் புகார் செயல்முறையை ‘விக்டோரிய சம வாய்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்’ (Victorian Equal Opportunity and Human Rights Commission),  வழங்குகிறது.  பாரபட்சம், பழிவாங்கல், மனித உரிமைகள் மற்றும் இன அல்லது மத நிந்தனை போன்ற பிரச்சினைகளையும் அவர்கள் குறிப்பாகக் கையாளுகின்றனர். விசாரணை அதிகாரி ஒருவருடன் பேச 1300 292 153- ஐ அழையுங்கள்.

‘விக்டோரிய சட்ட உதவி’ (Victorian Legal Aid)

குற்றவியல் நடத்தையாக  அமையாக் கூடுமான பாலியல் தொந்தரவுகளைப் பற்றிப் புகாரளிக்க உங்கள் உள்ளூர் காவல் நிலையம் வழியாக விக்டோரிய காவல்துறையுடனும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

நாம் ஒன்றுபட்ட தொழிற்சங்கங்கள்’ (We are union)

உங்கள் பணியிடத்தின் பாதுகாப்பான பணிச்சூழலுக்கான கடமைகள் தொடர்பாக ஆலோசனைகளையும்  வழங்க உதவக்கூடிய தொழிலாளர் சங்கங்களின் பட்டியலை  ‘நாம் ஒன்றுபட்ட  தொழிற்சங்கங்கள்’ (We are union) என்ற அமைப்பு வழங்குகிறது.

வேறொருவர் சார்பாகப் புகாரொன்று அளித்தல்

மூன்றாம் தரப்பினரும் (எடுத்துக்காட்டாக, நீங்கள் பாலியல் தொந்தரவை நேரில் பார்த்திருந்தால், அல்லது பாதிக்கப்பட்ட நபரின் பாலியல் தொந்தரவு குறித்து அறிந்திருந்தால்) மேற்கண்ட வழிமுறைகள் மூலமாக ஒரு புகாரினை அளிக்க முடியும், ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்பதாக நீங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் கலந்தாலோசித்து அடுத்த நடவடிக்கைகள் பற்றி உடன்பாடு கண்டிருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் உடன்படுவதும், அவர் சார்பாக மூன்றாம் தரப்பினர் எடுக்கும் நடவடிக்கைகளின் மீது அவர் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் முக்கியம். பாலியல் துன்புறுத்தல்களைப் புகாரளிக்க எடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் உடன்பாடு கொண்டிருத்தல், அத்துடன் செயல்முறையினை மேற்பார்வைசெய்தல்  மற்றும் பாலியல் தொந்தரவு புகாரளிப்புக்கு கிடைக்கும் பதில்கள் குறித்துத் தெரியப்படுத்தப்படல்  ஆகியவை இதில் அடங்கும்.

பல சந்தர்ப்பங்களில், மூன்றாம் தரப்பினர் ஒருவர் பாலியல் தொந்தரவு குறித்த புகாரினை அளித்தால், பதிலளிக்கும் அமைப்பு இந்த விஷயத்தைத் தொடர பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும். மூன்றாம் தரப்பினர் குறிப்பிட்ட சம்பவத்தின் எந்த விவரங்களையும் கொடுக்காமல், பாலியல்  தொந்தரவைப் பற்றிப்புகாரளிப்பதற்கும் பதிலளிப்பதற்குமான செயல்முறை பற்றி கலந்துரையாட கீழேயுள்ள அமைப்புகளைத் தொடர்பு கொள்ளலாம்.

பிரத்யேக திட்டங்கள்

பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் LGBTQIA + இளவயதினர், புலம்பெயர்ந்தோர், அகதிகள் போன்ற குறிப்பிட்ட மக்களுக்கு உதவுவதற்கான பிரத்யேக திட்டங்களும் உள்ளன.

‘புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம்’ The Migrant Workers Centre

‘புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம்’ (The Migrant Workers Centre)  எனும் அமைப்பு விக்டோரியாவிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், பணியிடத்தில் அவற்றைச் செயல்படுத்துவதற்கும், பிற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஒன்றுசேர்வதற்குமான ஆற்றலை அளிக்கிறது. வார நாட்களில்  03 9659 3516-இல் அழையுங்கள்.

'மகளிர் ஆரோக்கிய பல்கலாச்சார மையம்’ (Multicultural Centre for Women’s Health)

'மகளிர் ஆரோக்கிய பல்கலாச்சார மையம்’ (Multicultural Centre for Women’s Health) எனும் அமைப்பு புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிப் பின்னணிகளைக்  கொண்ட பெண்களுக்கு ஆதரவுதவியளிக்கிறது அத்துடன் அவர்களது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு உதவவும் அவற்றை மேம்படுத்துவதற்குமான தகவல்களை வழங்குகிறது. 1800 656 421-இல் அழையுங்கள். உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களும் இவர்களிடம் கிடைப்பார்கள்.

'பாலியல் தொந்தரவுத் தடுப்பு மையம்' (Centre Against Sexual Harassment)

'பாலியல் தொந்தரவுத் தடுப்பு மையம்' (Centre Agaisnt Sexual Harassment) எனும் அமைப்பானது பதில்-நடவடிக்கை எடுத்து உங்களுக்கு உதவக்கூடிய உங்களுடைய தேவைகளுக்கேற்ற  சேவைகளுடன் உங்களைத் தொடர்புபடுத்த உதவுகிறது, மேலும் அறிவார்ந்த தெரிவுகளை மேற்கொள்ள மக்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. 03 5441 0430-இல் அவர்களை அழையுங்கள்.

'ஆஸ்திரேலிய ஆடவர் உதவி இணைப்பு' (MensLine Australia)

'ஆஸ்திரேலிய ஆடவர் உதவி இணைப்பு' (MensLine Australia) என்பது குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த ஆண்களுக்கான இணையவழி ஆலோசனை சேவையாகும் (இது 24/7 எனும் ரீதியில் கிடைக்கும்). 1300 789 978-இல் அவர்களை அழையுங்கள்.

'க்வியர்ஸ்பேஸ்' (Queerspace)

LGBTQIA + என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்களுக்கு 'க்வியர்ஸ்பேஸ்' சமூக ஆலோசனை  உதவி வழங்குகிறது. 03 9663 6733 –இல் அழையுங்கள்.

பணியாளர் பொறுப்புகள்

‘தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புச் சட்ட’த்தின் பிரிவு 25, ஊழியர்கள் பணியில் இருக்கும்போது அவர்களின் கடமைகள் என்ன என்பதைக் கோடிட்டுக் காண்பிக்கிறது. ஒரு பணியாளராக நீங்கள் கண்டிப்பாக:

  1. நீங்கள் செய்யும் அல்லது செய்யாத காரியங்களால் பாதிக்கப்படக்கூடிய மற்றவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு நியாயமான அக்கறை கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக, உருட்டி-மிரட்டல் அல்லது பாலியல் தொந்தரவு போன்ற தகாத நடத்தைகளை வெளிப்படுத்தாமல் மற்ற ஊழியர்களை சரியான முறையில் நடத்தவேண்டும்.
  2. OHS சட்டம் அல்லது விதிமுறைகளுக்கு இணங்க அவர்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் உங்கள் முதலாளியுடன் ஒத்துழைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, உபகரணங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பான பணிக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் அத்துடன், பயிற்சிகளில் கலந்து கொள்ளவேண்டும்.
  3. உடல்நலம், பாதுகாப்பு மற்றும் பொது நலனில் ஆதரவுதவியாக இருக்கும் வகையில் பணியிடத்தில் எதிலும் வேண்டுமென்று அல்லது பொறுப்பற்ற முறையில் தலையிடவோ அல்லது அதனைத் தவறாகப் பயன்படுத்தவோ கூடாது.
  4. பணியிடத்தில் உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் நியாயமான கவனம் செலுத்தவேண்டும்.